.
 
 

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும்  உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 20வது தமிழர் விளையாட்டு விழா. ஞாயிறு - 02-07-2017

பத்திரிகைச்செய்தி 25.05.2017

தயாராகுங்கள்!
பாரிசின் மிகப்பெரிய பூங்கா – மைதானமான லு புசே (le Bourget) LAire des Vents Dugny பூங்காவில் பல்லாயிரக்கணக்கில் தமிழ்மக்கள் ஒன்றுகூடி – ஒருதாய் பிள்ளைகளாய் முழு நாள் பொழுதைக்கழிக்கும் மாபெரும் தமிழர் விழா. 20வது தடவையாக எதிர்வரும் 02.07.2017 ஞாயிறன்று நிகழவுள்ளது.

பிரான்ஸ் இளம் தமிழ் தலைமுறைக்கும், மூத்த தலைமுறைக்கும் இடையேயான பண்பாட்டு கைகோர்ப்பு தமிழால் ஒன்றுபட்டு - திரண்டால் மிடுக்கு

பத்தொன்பதாண்டுகளுக்கு முன்னர் பிரான்சு வாழ் ஈழத்தமிழ்சமூகத்தின் மத்தியில் சமூக - பண்பாட்டு - விளையாட்டுத்தளத்தில் நட்புறவினை  மேம்படுத்தவும் - உருவாகிவரும் அடுத்ததடுத்த தலைமுறைகளிடையே புரிதலை ஏற்படுத்துதற்குமானதொரு வழிமுறையாக தமிழர் விளையாட்டுவிழா உருவாக்கப்பட்டது.  மகிழ்வூட்டும்  நிகழ்வாகவும் - பாரம்பரியங்களை நினைவூட்டும் நிகழ்வாகவும் இது வடிவமைக்கப்பட்டது.
பிரான்சு தழிழ் சமூகத்தின் மத்தியில் நிலவும் சமூக நெருக்குவாரங்கள் - பண்பாட்டு புரிதல்கள் - பாரம்பரியம் தொடர்பான அறிமுகங்கள் என்பனவற்றினை ஆரோக்கியமானமுறையில் எதிர்கொள்வதற்கான சமூக செயற்பாடுகளை எதுவித புறஅழுத்தங்களுக்கும் இடம்கொடுக்காது தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்கின்ற எமது திடசங்கற்பமே தொடர்ந்தும் தமிழர் விளையாட்டு விழாவினை முன்னெடுக்க வைக்கின்றது. பெரும் பொருளாதார நெருக்கடிகள், எதிர்காலம் பற்றிய எதுவித புரிதலுமற்ற சில தரப்புக்களின் அழுத்தங்கள்  என்பனவற்றினை தாண்டியும் நாம் இந்த செயற்பாட்டிற்காக உழைக்கின்றோம்.

ஒரு சமூக செயற்பாடாக - எதிர்காலம் பற்றிய விஞ்ஞானபூர்வமான நடவடிக்கையாக - தலைமுறைகளை ஒன்றிணைக்கும் பண்பாட்டு நிகழ்வாக இவ்வாண்டும் தமிழர் விளையாட்டுவிழா பெரும் நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கான ஆதரவினை வழங்குமாறு உரிமையுடனும் - பொறுப்புணர்வுடனும் உங்களை கோருகின்றோம்.

நிகழ்வுகளுக்கான  ஆதரவு - பொதுவான ஆதரவு என்கின்ற வடிவத்தில் உங்கள் பொருளாதார உதவிகளை வழங்குமாறு தாரளமனங்கொண்டவர்களிடம் கோருகின்றோம்.  நிகழ்வில் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று - தலைமுறைகளை ஒருங்கிணைத்து - பிரான்சு தமிழ்சமூகத்தினை செழுமைப்படுத்திட வாருங்கள் என அனைவரையும் அழைக்கின்றோம்.

நிகழ்வில் இளையதலைமுறையினர் அறிந்திராத பாரம்பரிய தமிழர் விளையாட்டுக்களான கிளித்தட்டு, சங்கீதக்கதிரை, முட்டியுடைத்தல், தலையணைச் சண்டை, கயிறுழுத்தல் போன்ற விளையாட்டுக்களுடன், கரப்பந்தாட்டம், கரம், சதுரங்கம் இன்னும் பல வேடிக்கை வினோத விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  புதிதாக குறுந்தூர மரதனும் மைதானத்தில் நடைபெறவுள்ளது, பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் பதிவுகளை மேற்கொள்ளவும்.

கரப்பந்தாட்டம், கிளித்தட்டு மற்றும் குழு விளையாட்டுக்களில் பங்குபற்ற விரும்புபவர்கள் மைதானத்தில் விளையாட்டுக்கான பணிமனையில் குழுக்களை பதிவு செய்து  இணைந்து கொள்ளலாம். இசைநிகழ்வில் கலந்து கொண்டு பாட விரும்புவோர், மேற்கத்தேயநடனம் ஆடவிரும்புவோர், கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவோர் எமது பணிமனையில்இ கலைப்பிரிவுடன் தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளலாம். சிறப்பாக தெருக்கூத்து, நாட்டுக்கூத்து போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது. இவற்றுடன் மைதானத்தில் தாயக சுவையுடன்  தமிழர் பாரம்பரிய உணவுகளை உண்டு சுவைத்திட தமிழர் உணவகம்.

நிகழ்வில் பல்வேறு தமிழர் சமூக அமைப்புக்களினதும், வர்த்தக நிவனங்களினதும்  காட்சி அறைகளும்  மைதானத்தில் அமைக்கப்படவுள்ளது. மைதானத்தில் விளம்பர வியாபார கடைகளை நிறுவ விரும்பும் வியாபார நிறுவனங்கள் எமது பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்

விழா சிறப்பு மலர், துண்டுப்பிரசுரங்கள், பெரிய விளம்பர பிரசுரங்கள் ஆகியவற்றில் விளம்பர்கள் செய்ய விரும்புவோர்இ விழாவிற்கு உதவ விரும்புவோர் உடனடியாக எமது பணிமனையுடன் தொடர்பு கொள்ளவும்

கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக ஈழத்தில் இருந்து கேட்கும் அவலக்குரல்களுக்கு ஆதரவுக்கரம் கொடுக்கும் ஒரே நோக்குடன் இன்றும் தனது சேவையைத் தொடர்ந்துகொண்டிருக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் கடந்த 19 வருடங்களாக தமிழர் விளையாட்டு விழா எனும் நிகழ்வை வருடாவருடம் சிறப்புற நடாத்துவதன் மூலம் தாயக உறவுகளை மனதில் நினைந்து பிரான்ஸ் வாழ் தமிழர்கள் அனைவரும் வருடத்தில் ஒரு முறை ஒன்றாக ஒன்று கூடவும் அதனுடாக அன்று கிடைக்கும் நிதியின் மூலம் தேவையான உதவிகளை தாயக உறவுகளுக்கு வழங்கும் நடவடிக்கையையும் செய்து வருகின்றது.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் வெளிப்படையான கட்டமைப்பாகவும், பிரான்ஸ் அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப செயற்படும் நிறுவனமாகவும், நிதி மற்றும் நிர்வாக விடயங்களில் பொறுப்புவாய்ந்த நிறுவனமாகவும், தமிழ்மக்களின் நலன்களிற்கும் - ஒற்றுமைக்கும்  உதவிடும் நிறுவனமாகவும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் தொடர்ந்தும் செயற்படு வருகின்றது.

இவ் ஆண்டும் தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படும் அனைத்து அமைப்புக்களின் ஆதரவோடு நடாத்தவுள்ளது காலை 10.00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி தமிழர் பண்பாட்டு தவில் நாதஸ்வர இசை முளங்க, தமிழ் இனிய நடனத்துடன் சிறப்பு விருந்தினர்கள் அழைப்பு இடம்பெற்று கொடியேற்றலுடன் விளையாட்டுக்கள் ஆரம்பமாகும் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்

நன்றி

ஓன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் – பிரான்ஸ்

தமிழர் விளையாட்டுவிழா ஏற்பாட்டுக்குழு  , தமிழர் புனர்வாழ்வுக்கழகம்
தொடர்புகட்கு: 01 40 38 30 74

 
 
English