சுனாமி பேரலையினால் உயிரிழந்த மக்களின் 12ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு,
26.12.2016
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாளை எவராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது, உலகையே நிலைக்குலையச் செய்த ஆழிப்பேரலையின் ஊளித்தாண்டவம் அரங்கேறிய நாள். அந்த கோரத்தாண்டவ சுனாமி பேரலையினால் உயிரிழந்த மக்களின் 12ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்சின் ஏற்பாட்டில் 50 Rue de Torcy பாரிஸ் 75018 தேவாலய மண்டபத்தில் 26.12.2016 மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
பிரதான பொதுச் சுடரை தமிழர் புனர்வாழ்வுக்கழக பிரான்ஸ் பணிப்பாளர் திரு.செ.சுந்தரவேல் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து தாயக விடுதலைக்காக போராடி வீரமரணத்தை தழுவிக்கொண்ட மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தள்களாலும் சாவடைந்த மக்களையும், பிரான்சில் பயங்கரவாத தாக்குதலினால் சாவடைந்த மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
ஆழிப்பேரலையில் உயிரிழந்த அத்தனை உறவுகளுக்குமா நினைவுச்சுடரினை அனைத்துலக தொடர்பக இணைப்பாளர் திரு. நாயகன் அவர்கள் ஏற்றிவைத்தார். பயங்கரவாத தாக்குதலால் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுச்சுடரினை ரான்சி நகரமன்ற உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து வருகை தந்த அனைவரும் தீபம் ஏற்றி மலர் தூபி வணக்கம் செலுத்தினர்.
நினைவுரையினை ஆசிரியர் திரு.கனகசபை அரியரத்தினம், தமிழர் புனர்வாழ்வுக்கழக பிரான்ஸ் பேச்சாளர் திருமதி. சுபா குருபரன் ஆகியோர் நிகழ்தினர். சிறுமி தெய்வேந்திரன் கரிகரனி அவர்களின் சுனாமி நினைவுப்பகிர்வும், திரு. சுதர்சன் அவர்களின் கவிதை, பாடகர் திரு.இந்திரன் குழுவினரின் இசைமாலை நிழ்வும் இடம்பெற்றது.
ஒலி அமைப்பை அருள் சொனோ, மண்டப இணை ஆதரவை விழாக்களுக்கான அரங்கொளுங்கமைப்பாளர், திரு. அழகன், நிழல் படப்பிடிப்பை யாழ் தீபன், நிகழ்ச்சி தொகுப்பை திரு. அருள்மொழித்தேவன் ஆகியோர் வழங்கினர்.
இலங்கையை பொறுத்தவரை உத்தியோகபூர்வ தரவுகளின்படி 30,977 பேர் சுனாமியின் கோரப்பிடியில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 5,644 பேர் காணாமற் போயுள்ளனர். 15,197 நபர்கள் உடல் ஊனமுற்றோர் அல்லது குறிப்பிடத்தக்க பாதிப்புக்கோ உள்ளாகியுள்ளனர். இலச்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியான நிலைக்குள் தள்ளப்பட்டனர். சுனாமியினால் பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் இது குறைவாக இருந்த போதும் சின்னஞ்சிறு நாடான எமக்கு இது பேரழிவாகவே உள்ளது.
வடக்கு - கிழக்கில் அதிகளவு சேதம். வடக்கு - கிழக்குக் கரையோரங்களில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என இருபதாயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள். சுனாமியின் தாக்கத்தினால் கரையோர மக்களின் உயிர்களே பெருமளவில் காவு கொள்ளப்பட்டன. இலங்கையை சுனாமி தாக்கும் போது அண்ணளவாக காலை 7.30 மணி இருக்கும். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாதலால் தேவாலயங்களுக்கு சென்றவர்களும், வீட்டை விட்டுத் தொழிலுக்காக அல்லது வேறு தேவைகளின் நிமித்தம் வெளியில் சென்றவர்களும் முதல்நாள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாட வெளியிடங்களுக்குச் சென்றவர்களும் மட்டுமே உயிர் தப்பிப் பிழைத்தனர்.
ஆனால் வெளியிடங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்குமாக கரையோரங்களிலுள்ள உறவினர்களின் வீடுகளில் வந்து தங்கியவர்கள், காலையில் மீன் வியாபாரத்திற்காக அல்லது உடற்பயிற்சி செய்வதற்காக கடற்கரைக்குச் சென்றவர்கள் அனைவரும் இச்சுனாமியில் கொல்லப்பட்டனர்.
உயிர்ச் சேதங்கள் ஒருபுறமிருக்க சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சொல்லில் அடங்காது. நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 78,387 வீடுகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. 60,197 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இவ்வீடுகளுடன் சேர்ந்து மக்களின் பரம்பரைச் சொத்துக்கள் பலவும் அழிந்து போயின. வாழ்நாள் முழுவதும் தேடிய தேட்டங்கள் அனைத்தையும் சிலமணி நேரத்தில் இழந்த இம்மக்கள் இத்துயரில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் உள்ளனர். கரையோர மாவட்டங்கள் பலவற்றிலும் உட்கட்டமைப்புக்களில் பெரும்பாலானவற்றைச் சுனாமி அழித்தொழித்தது.
அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை, காலி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்கள் அதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாயின. 161 பாடசாலைகள் முற்றாகவும் 59 பாடசாலைகள் பகுதியளவிலும் நாடு முழுவதிலும் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை விட வணக்கஸ்தலங்கள், வைத்தியசாலைகள், மக்கள் மண்டபங்கள், பொதுச் சந்தைகள் போன்ற பல சொத்துக்களும் முற்றாகவும் பகுதிகளாகவும் அழிந்து போயின. மின்சாரம், தொலைபேசி, குடிநீர் போன்றவற்றின் இணைப்புக்கள் முற்றாக சீர்குலைந்தன. வீதிகள், பாலங்கள் பலவும் போக்குவரத்திற்கு தவாதவாறு சேதமடைந்தன.
மக்களின் வாழ்வாதாரங்கள் பலவும் சுனாமியினால் அழித்தொழிக்கப்பட்டன. பாதிப்புக்குள்ளான மாவட்ட மக்களின் வேளாண்மை உட்பட அனைத்துப் பயிர்களையும், கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என அனைத்தையும் சுனாமி அழித்துச் சென்றது. சிறு முதலீடுகள் மட்டுமின்றி பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருந்த வர்த்தகர்கள் அனைவரும் நிர்க்கதிக்குள்ளாயினர்.
ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரத்தில் பாரிய அழிவை ஏற்படுத்திச் சென்ற இச்சுனாமியினால் ஆண்டாண்டு காலம் தங்கள் இருப்பிடங்களில் வசித்த 154,963 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இதைவிட 235,145 குடும்பங்கள் முற்றாகப் பாதிப்புக்குள்ளாயின. வரலாற்றில் முன்னொரு போதும் கண்டிராத இப்பேரழிவைக் கண்ட இலங்கை அரசு, அவ்வேளையில் நிலைகுலைந்து போனதென்னவோ உண்மைதான்.
உலக நாடுகள் பலவும் இலங்கையை நோக்கி நேசக் கரம் நீட்டின. அரச உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய சில வாரங்களாயின. உலகளாவிய ரீதியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் இலங்கை வந்து நிவாரணப் பணியில் ஈடுபட்டன.
வடக்கு கிழக்கில், அரச சார்பற்ற உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களையும் இணைத்து தமிழீழ நிழல் அரசு துரிதகதியில் சேவையாற்றியதை மறக்க முடியுமா ! அந்த நினைவுகளோடு எமது மக்களின் நல்வாழ்வுகாக தொடந்தும் சேவையாற்றுவோம்.
இன்றை தினம் சுனாமி நினைவுகளை மீட்டு எமது வருங்கால சந்ததிக்கு வளமான வாழ்வை ஏற்படுத்திக்கொடுப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.
ஒன்றிணைவோம் சேவை செய்வோம் |