.
 
 

ஊடக அறிக்கை
06.06.2011 பாரீஸ்

பொறுப்புணர்வும் - சேவையுணர்வுமே எமது வழிகாட்டும் கோட்பாடு!
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்
ஊடக அறிக்கை

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்சுக்கு எதிராக குறித்த குழுவொன்றினால் இயக்கப்படும் சில இணையத்தளங்கள் நடத்தும் பொய்ப்பரப்புரைகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்தகைய பொய்ப்;பரப்புரைகள் தொடர்பாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகம் விழிப்புடன் இருத்தல் வேண்டும் என தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் வேண்டுகின்றது.

கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்ச்சமூகத்தின் நலன்களுக்காக செயற்படும் பல்வேறு தரப்புக்களையும், துரோகிகளாகவும், விரோதிகளாகவும் பட்டம்சூட்டி விமர்சித்து, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்திவரும் இந்த ஊடகக்குழு தற்போது சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக பிரான்சில் செயற்படும் எமது நிறுவனத்தினையும் தமது தற்குறித்தனமான வசைபாடலுக்குட்படுத்தியிருப்பதானது ஆபத்தான – உள்நோக்கம் கொண்ட – தமிழ்மக்களின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே எம்மால் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, பிரான்சில் தமிழ்ச்;சமூகம் ஒன்றுகூடுவதற்கும், ஒருதாய்வயிற்றுப்பிள்ளைகளாக தம்மை உணர்வதற்கும், தலைமுறை இடைவெளிகளைக்கடந்து கைகோர்த்து நிற்பதற்குமாக நிகழ்த்தப்படும் தமிழர் விளையாட்டு விழா நிகழ்வினை குறிவைத்து இந்த விசமிகள் ஆரம்பித்துள்ள பரப்புரைகள், கடந்த காலங்களில் இதே தமிழர் விளையாட்டு விழாவினைத் தடுத்துநிறுத்த சில தூதரகங்கள், மற்றும் தொடர்புபட்ட தரப்புக்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளை ஒத்தமையாக இருப்பதை இவ்வேளையில் மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் கடந்த இருபது வருடங்களாக தாயகத்தில் பல்வேறு மனிதாபிமான மற்றும் மனிதநேய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிறுவனம் என்பதுடன், 2009 மே மாதத்திற்கு பிற்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களிற்கு பல்வேறு வகைகளிலும் புனர்வாழ்வு உதவிகள் சென்றடைவதற்கான செயற்திட்டங்களை மனிதாபிமான எண்ணத்துடன் முன்னெடுத்துவரும் தொண்டு நிறுவனமாகும். பிரான்ஸ் அரசு மற்றும் பிரான்ஸ் சமூகம் மத்தியில் தமிழ் மக்களின் மனிதநேய முகமாக செயற்படும் நாம், ஒன்றுபட்ட பிரான்ஸ் தமிழ்ச்சமூகத்தின் செயற்பாடுகளுக்கான நிறுவனமாகவும் எம்மை நிலைநிறுத்தி வருகின்றோம். கடந்த இரு வருடங்களாக தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட சனநாயக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அதேவேளையில், குழுவாதத்தினையும் - அந்த குழுவாதத்தினைப் வலுப்படுத்துவதற்காககப் பாவிக்கப்படும் அருவருப்பான பரப்புரை அரசியலையும் நிராகரித்து வந்துள்ளோம். எந்த தனிமனிதர்களினது அல்லது குழுக்களினது தனிப்பட்ட விருப்புவெறுப்புக்களுக்கு அடிபாணியாது என்பதையும் பல்வேறு இடங்களில் தெளிவாக நாம் சொல்லியும் வந்துள்ளோம்.

வெளிப்படையான கட்டமைப்பாகவும், பிரான்ஸ் அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப செயற்படும் நிறுவனமாகவும், நிதி மற்றும் நிர்வாக விடயங்களில் பொறுப்புவாய்ந்த நிறுவனமாகவும், தமிழ்மக்களின் நலன்களிற்கும் - ஒற்றுமைக்கும் உதவிடும் நிறுவனமாகவுமே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் தொடர்ந்தும் செயற்படும் என்கின்ற உறுதியினை நாங்கள் மீள உறுதிப்படுத்துவதுடன், இந்த எண்ணங்களைக் கொண்ட அனைவரையும் அரவணைக்கவும், உள்வாங்கவும் தயாராகவுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்

செ. சுந்தரவேல்
பணிப்பாளர்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்

 
 
English