.
 
 

சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்
வீரகேசரி இணையம் 16-12-2009

உலகளாவிய ரீதியில் விசேட தேவையுடையோர் (வலது குறைந்தோர்) தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் எமது நாட்டை பொறுத்தவரையில் இவர்களின் விகிதாசாரம் அதிகமாகவே காணப்படுகின்றது. இதற்கு யுத்தம், வீதி விபத்துகள், வறுமை, போஷாக்கின்மை, வன்முறை, இரத்த உறவு திருமணங்கள் போன்றவற்றைக் காரணமாகக் கூறலாம்.

எனவே வலது குறைந்தோர் பிறப்பின் மூலமாகவும் இடைநிலையில் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். சமூக பொருளாதார பிரச்சினைகளுக்குட்பட்டுள்ள பெருந்தோட்டங்களைப் பொருத்த மட்டில் இவர்களின் தொகை மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.

ஒரு தோட்டத்தை எடுத்துக் கொண்டால் 5 முதல் 7 வரையிலானோர் விசேட தேவையுடையோராக இருக்கின்றனர். இவர்கள் சுயமாக இயங்க முடியாதவர்களாகவும் கை, கால் உறுப்புகள் பாதிப்படைந்தோராகவும் மன, உடல் வளர்ச்சி குன்றியவர்களாகவும் கிரகித்தல் நிலைகளில் பாதிக்கப்பட்டவர்களாகவும் பேச முடியாதவர்களாகவும் இரண்டு மூன்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

பெருந்தோட்டங்களை தவிர்ந்த நகர்ப்புறங்களில் இருக்கின்ற விசேட தேவையுடையோருக்கிடையில் எல்லா வகையிலுமே குறிப்பாக தங்களுக்குக் கிடைக்கின்ற அரச, அரச சார்பற்ற, குடும்பங்களின் மூலம் கிடைக்கப் பெறும் உதவிகள், ஒத்துழைப்புகளிலும் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

சமூகத்தினரின் கடமை

குடும்பங்களில் இவர்கள் தங்கியே வாழ வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். எனவே இவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமைகளும் குடும்பங்களையும் சமூகத்தினரையும் சார்ந்திருக்கின்றது.

பலர் தமது பிள்ளைகளுக்கு ஊட்டம் நிறைந்த நிறையுணவு, அன்பு, தேவையான அரவணைப்பு என்னும் விசேட கவனிப்பை கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் பாதிப்படைந்த பிள்ளை மிக இலகுவாக மனதைரியம் பெறுவதுடன் வாழ்வில் நம்பிக்கையையும் பெற்று வாழ எத்தனிக்கின்றான்.

பொருளாதார சிக்கலின் மத்தியில் வாழ்க்கையை நடத்தும் குடும்பங்களின் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளும் கிடைப்பதென்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும்.

இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ள பிள்ளை இயல்பாகவே இன்னும் அதிகமான தாக்கத்திற்கு உள்ளாக்கப்படுகின்றான். என்னதான் பொருளாதார பாதிப்பிருந்தாலும் இவர்களுக்குத் தேவையான அன்பு, அரவணைப்பு குடும்பத்தவர்களின் ஆதரவு போன்றவை ஒருமித்து கிடைக்கும்போது, இவர்களின் உடல், உள ஆரோக்கியத்திற்கும் இவை உந்து சக்தியாக மாறும் என்பது உண்மை.

பொதுவாக இவர்களை ஏதாவது நிறுவனத்தின் மூலம் இவர்களுக்கான நிலையங்களில் வைத்து பராமரிப்பதற்கு பெற்றோர்கள் முன் வந்தாலும் தனிமையில் அனுப்ப விரும்பாத பெற்றோர்களும் இருக்கின்றார்கள்.

எனவே இவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு குடும்ப அங்கத்தவர்களும் கடமைப்பட்டிருக்கின்றார்கள். வெளியிடங்களுக்கு கூட்டி செல்லுதல், பொது வைபவங்களில் பங்கு கொள்ளச் செய்தல் வீட்டில் ஏற்படும் விசேட வைபவங்களில் முன்னிலைப்படுத்துதல் போன்ற பழக்க வழக்கங்களின் மூலமும் நம்பிக்கைகளையும் திடத்தையும் பெற்றுக் கொடுக்க கூடியதாக அமையும்.

அதி விசேட சலுகை

ஆனால் பல சந்தர்ப்பங்களில் இவர்களுக்கான இந்நிகழ்வுகள் குடும்பங்களில் இவர்களுக்குக் கிடைப்பதும் அரிதாகவே காணப்படுகின்றது. எனவே குடும்பங்களில் இருக்கின்ற சாதாரண ஒரு பிள்ளைக்கு கிடைக்கக் கூடிய சலுகைகளை விட அதி விசேட சலுகைகளை அனைத்து சந்தர்ப்பங்களிலும் குடும்பத்திலுள்ளோர் பெற்றுக் கொடுப்பதற்கு முன் வர வேண்டும்.

இவை சாதாரணமாகவே கிடைக்கும் பட்சத்தில் இவர்கள் உடல், உள ஊக்கம் பெற்று சாதாரண மனிதனாக செயற்பட முடியும். எனவே விசேட தேவையுடையோர் மட்டில் குடும்பத்தில் மட்டுமல்ல, சமூக மக்களும் ஆரோக்கிய வாழ்வை இவர்களுக்குக் பெற்றுக் கொடுக்க அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதனை மறுக்க முடியாது.

அந்த வகையில் இவர்களை நோக்கும்போது விசேட தேவையுடையோர் தமது குடும்பங்களைக் கட்டிக் காக்கின்றவர்களாகவும் இருக்கின்றனர்.

நமது சமூகத்திலும் தையல், தச்சு, பெனர் பெயின்டிங், லொத்தர் டிக்கட் விற்பனை, கடைகளில் பணியாளர்களாக, தோட்ட தொழிலாளியாக பல நிலைகளில் இவர்கள் செயல்படுவது, நமது சமூகத்திலே பெருமைப்படக் கூடிய ஒரு விடயமாகும். மேலும் வழி நடத்துகின்ற ஆளுமை திறனுள்ளோரும் பலர் சமூகத்தில் செயல்படுவதனையும் சிலர் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதனையும் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

பெருந்தோட்டங்களில் வாழ்க்கை நடத்துகின்ற விசேட தேவையுடையோரைப் பொறுத்தமட்டில் நெடுந்தூர பார்வையிலான செயல் திட்டங்கள் அவசியமாகின்றன.

இவர்களுக்கான பணியை மட்டுமே முன்னிலைப்படுத்தி செயல்படுவதற்கு முன்வரும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இவர்களைப் பராமரிப்பதில் பொருளாதார பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. எனினும் இவற்றையும் மீறி நமது சமூகத்திலே இருக்கின்ற விசேட தேவையுடையோர்களுக்காக மட்டுமே செயற்பட முன்வரும் இளைஞர், யுவதிகளுக்கு இந்த வகையில் ஊக்கம் தர வேண்டிய பொறுப்பும் சமூகத்தினை சார்ந்ததே.

எனவே இவர்களின் பணிகளை, தொடரும் காலங்களில் பெருந்தோட்டங்களிலே நாம் அதிகளவில் காணக் கூடியதாக இருக்கும்

 
 
English