.
 
 

24வது தமிழர் விளையாட்டு விழா 30-07-2023
பத்திரிகை செய்தி 01.08.2023

நிழற்படங்கள்

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் – பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் – பிரான்ஸ் இணைந்து நடாத்திய 24வது தமிழர் விளையாட்டு விழா 30-07-2023 ஞாயிற்றுக்கிழமை வழமையான L’Aire des Vents Dugny திடலில் சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்வின் பிரதான பொதுச்சுடரினை லெப் கேணல் விக்ரர் அவர்களது  சகோதரரும், விளையாட்டுவிழாவின் விளையாட்டுக்களுக்கான பிரதான ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான திரு. றொனி மருசலீன் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை கரும்புலி கப்டன் கதிர்நிலவன் என அழைக்கப்பெற்ற சிவசுப்ரமணியம் நவீதன் அவர்களது சகோதரி திருமதி. விநாயகமூர்த்தி நாகபாலினி அவர்கள் ஏற்றிவைத்தார். முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் சுடரினை சமூக செயற்பாட்டாளர் திருமதி. செல்வி சுரேந்திரகுமார் அவர்கள் ஏற்றி வைத்தார்.

இசைப்பிரியா ‘’பாண்ட்’’ வாத்திய இசையும், தமிழிசை நடன வடிவமான ‘’இன்னியம்’’ அணியும் தொடக்க நிகழ்வுக்கு அழகூட்டியிருந்தது. 93ம் பிராந்திய மாவட்டசபை உறுப்பினர் சைனபா சயட்  பிரான்ஸ் தேசியக் கொடியினை ஏற்றி வைக்க, ஐரோப்பிய ஒன்றியக் கொடியினை டிரான்சி நகரசபை உறுப்பினரும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் பிரான்ஸ் நாட்டின் தலைவருமாகிய திரு. அலன் ஆனந்தன் அவர்கள்  ஏற்றி வைத்தார். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கொடியை இத்தாலி நாட்டின் புனர்வாழ்வுக் கழக தலைவர் திரு. கோணேஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பண்பாட்டு நிறைகுட விளக்கினை சிறப்பு விருந்தினர்கள் கூட்டாக ஏற்றிவைத்தனர். இனியத்தினதும், இசைப்பிரியா பாண்ட் வாத்திய இசையும் வழங்கி இனிதாய் அணிவகுத்த கலைஞர்கள், பயிற்றுவித்த நெறியாளர் ஆகியோருக்கான மதிப்பளிப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடாத்தும் 12வது இராகசங்கமம் நிகழ்வின் அதிமேற்பிரிவு 2ற்கான தெரிவுப் போட்டிகளும் Star Sri இசைக்குழுவின் இசையில் சிறப்பாக இடம் பெற்றது. பாலம் படைப்பகம் வழங்கிய நாடகம் மற்றும் மகிழ் பறை இசை ஊர்வலவம் என்று பல காலை நிகழ்வுகளும் இவ்விழாவினை மெருகூட்டியிருந்தன.

Mauritius தூதுவர், நகரபிதாக்கள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட பிரதிநிதிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், தாயக செயற்பாட்டாளர்கள், துறைசார் விளையாட்டு செயற்பாட்டாளர்கள், தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

உள்நுழைவுச் சிட்டை இலக்க நல்வாய்ப்பில் Mac Book Pro பெற்றுக் கொண்ட குலுக்கல் முறையிலான வெற்றி இலக்கம் 01494 எண் தெரிவாகியது. ஆறுதல் பரிசில்களுக்கான இலக்கங்கள் : 
N° 1 : 06621
N° 2 : 07225
N° 3 : 03182
N° 4 : 02561
N° 5 : 07484
N° 6 : 03623
N° 7 : 06415
N° 8 : 03482
N° 9 : 03661
N° 10 : 02600
இப்பரிசில்களை சோழன் பல்பொருள் வாணிபம் வழங்கியிருந்தது.

தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீச பிரான்ஸ் தமிழர்களின் கோடைகால ஒன்றுகூடலான தமிழர் விளையாட்டு விழா வெகுசிறப்பாக இடம்பெற்றது.

இவ்விளையாட்டு விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கூடிமகிழ்ந்துள்ளனர். ஆடல், பாடல், இசை, விளையாட்டு என பல்வேறு மகிழ்வூட்டல் நிகழ்வுகள் திடலை அலங்கரித்திருந்ததோடு, பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் கடைவிரித்திருந்தன.

இத்திடலை வழங்கிய சென் சென்தெனிஸ் மாவட்ட அவை, La Courneuve, Dugny, Le Bourget நகரமன்றங்களிற்கும் மற்றும் காவல்துறையினர் அகியோருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகைளத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பொதுத்தொண்டை மகிழ்வெனக்  கொண்டு தன்னலம் கருதாது பணியாற்றிய தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள்,  தொண்டர்கள், தமிழ் தேசிய  அமைப்புகள், தமிழ் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், கலைஞர்கள், ஊடகங்கள், வர்த்தக நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், இளயோர்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கூட்டு சேவையினாலே தான் இவ்வாறான பெருமுயற்சிகள் சாத்தியமாகின்றது. எனவே 24வது தமிழர்  விளையாட்டு விழாவில்  பணியாற்றிய அனைவருக்கும்  நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மக்களிடத்தில் இதனைக் கொண்டு செல்ல பரப்புரைக்களத்தில் பங்காற்றிய கலைஞர்கள், ஊடகங்கள், சமூகவலைத் தளங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

7 175இற்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்த இந்நிகழ்வு இரவு 9.30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்”
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 

 

English