21வது தமிழர் விளையாட்டு விழா
பத்திரிகைச் செய்தி 08.07.2018
தமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய 21வது தமிழர் விளையாட்டு விழா 08-07-2018 ஞாயிறு காலை 10 மணிக்கு லு பூர்ஜே (le Bourget , L’Aire des Vents Dugny) மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.
தாயக விடுதலைக்காக தமது உயிரை அற்பணித்த மாவீரர்கள், போரினால் கொல்லப்பட்ட சமூகசேவையாளர்கள் மற்றும் மக்கள் நினைவாக 2009ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட நினைவுத் தூவி முன்பாக பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பிரதான பொதுச்சுடரினை தமிழர் விளையாட்டு விழா – விளையாட்டுக்குழு ஓருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு.ரவிக்காந் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த சென் செந்தெனிஸ் மாகாண அவைத்தலைவர் திரு. ஸ்ரிபன் துரூசல், ரான்சி துணைநகரபிதா பிரான்சுவா சங்கரலி, ரான்சி நகரசபை உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன், நாடுகடந்த அரச பிரதநிதிகளான, அவைத்தலைவர் திரு. பாலச்சந்திரன், திரு. கலையழகன், திரு. மைந்தன், திரு ஜெயசந்திரன், இங்கிலாந்தில் இருந்து வருகைதந்த திரு. கந்தப்பு ஆறுமுகம், ஜேர்மனியில் இருந்து வருகைதந்த திரு , சுப்பையா லோகதாஸ் இவர்களுடன் தமிழகத்தில் இருந்து வருகைதந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர்களான வழக்குரைஞர் திரு. அறிவுச்செல்வன் இயக்குணர் திரு.ஜெகதீச பாண்டியன் அவர்களும், முன்னாள் பிரான்ஸ் நாட்டு தேசிய இராணுவ வீரர்கள் நலன் பேண் சங்க தலைவர், சென் செந்தெனிஸ் மாகாண இளையோர் சங்கத்தலைவர், கல்யாணி உணவக அதிபர், தமிழர்புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வருகை தந்த மக்கள் அனைவரும்இ திருமதி. அனுசா மணிவண்ணன் அவர்களின் நெறியாள்கையில் தமிழர்களின் பாரம்பரிய இசைநடனமான இனியம் வரவேற்புடன் மைதானத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் வரை அழைத்து வரப்பட்டனர்.
பிரான்ஸ் நாட்டு தேசியக் கொடியினை சென் செந்தெனிஸ் மாகாண அவைத்தலைவர் திரு . ஸ்ரிபன் துரூசல், ஐரோப்பிய பாராளுமன்ற கொடியினை ரான்சி நகரசபை உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன், தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியினை த.பு.க மக்கள் தொடர்பாளர் திரு. பு. தர்சன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தாயகவிடுதலைக்காக போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும் பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்களால் கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர் நினைவுப்பாடலும் ஒலிக்கப்பட்டது.
தமிழர்களின் பண்பாட்டோடு இணைந்த மங்கள விளக்கினை சிறப்பு விருந்தினர்கள் இணைந்து எற்றி வைத்தனர். பாரம்பரிய இசை வழங்கிய இனியம் குழுவினர், இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர், சிறப்பு விருந்தினர்களால் மதிப்பழிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து விளையாட்டு விழாவிற்கான விளையாட்டுக்கள் ஆரம்பமாகியது.
தமிழர் விளையாட்டு விழா 2018 உதைபந்தாட்ட போட்டியில் 14 அணிகளும், சிறுவர்களுக்கான போட்டியில் 6 அணிகளும், 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் 5அணிகளும், விழா அன்று நடைபெற்ற 5 பேர் கொண்ட போட்டியில் 8 அணிகளும், பங்குபற்றியது, தனிநபர் போட்டிகளாக சிறந்த பந்து உதைப்பாளர், சிறந்த உதைபந்து தடுப்பாளர் போட்டிகளும் இடம்பெற்றது. ஈழத்தமிழர் உதைபந்தாட்டசம்ளேனம் பிரான்ஸ் இப்போட்டிகளை நாடாத்தி உறுதுணை வழங்கியது.
கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் 19 அணிகள் பங்குபற்றியது. தமிழர் கரப்பந்தாட்ட சம்மேளனம் இப்போட்டிகளை நாடாத்தி உறுதுணை வழங்கியது.
தாச்சிப்போட்டி, கயிறுழுத்தல் போட்டிகளில் பல அணிகளும், கலந்துகொண்டு பங்குபற்றி சிறப்பித்தனர். கரம், சதுரங்கம், சாக்கோட்டம், முட்டியுடைத்தல், கலையணைச் சண்டை, சங்கீதக் கதிரை, குறுந்தூர மரதன், குறிபார்த்துச் சுடுதல் மற்றும் ஜனரஞ்சகப் போட்டிகளுடன் சிறுவர் விளையாட்டுக்களும் இடம்பெற்றது.
அரங்க நிகழ்வாக பாரிஸ் சுருதி இசைக்குழுவினர் வழங்கிய இசைநிகழ்ச்சி, பார்வையார்கள் பங்குபற்றிய நீங்களும் பாடலாம், நாடகம், நடனம் போன்றவற்றுடன் நாம் தமிழர் பிரதிநிதிகளின் சிறப்புரைகளும் இடம்பெற்றது.
திருமதி. பிறிஞ்சி ரஞ்சித்குமார், அவர்களின் நெறியாள்கையில் இசைப்பிரியா ப்பாண் கலைக்குழுவினர் திடலினை சுற்றி வந்து அனைத்து மக்களையும் இசையால் நெகிழவைத்தனர்.
ஆசிரியர் அப்பன் அவர்களின் மாணவர்கள் வழங்கிய கராட்டி காட்சி விளையாட்டும் இடம்பெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சென் செந்தெனிஸ் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜோன் கிறிஸ்தோப் லகார்த், சென் செந்தெனிஸ் மாகாண உறுப்பினர் அமீட் சபானி, ஆர்ஜெந்தை நகரசபை சர்பாக திரு. சிவக்குமார், பொபினி நகரசபை உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரபிதாக்கள், நகரசபை உறுப்பினர்கள், போராளிகள், நாடு கடந்த தமிழீழ அரசபிரதிநிதிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், துறை சார்விளையாட்டு செயற்பாட்டாளர்கள், தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வெற்றியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
வர்த்தக நிறுவனங்கள், வானொலிகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், அரசியல்அமைப்புக்கள், சமூக நலன் பேணும் அமைப்புக்கள், தங்கள் வியாபார விளம்பர காட்சி அறைகளை நிறுவி மக்களுக்கான தமது பரப்புரையை முன்னெடுத்தனர்.
இவாண்டிற்கான உள்நுழைவுச் சீட்டு நல்வாய்பில் 2830 என்ற இலக்கம் குலுக்கல் மூலம் உந்துருளிக்கு தெரிவாகியது. அதனை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்குகின்றது.
தமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்களோடு ஒன்று படவும் ஓரு நாள் மகிழ்வாக இளைப்பாறவும், வறுமையில் வாழும் தாயக மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழர் விளையாட்டுவிழாவிற்கு இவ்வாண்டும், குடும்பம் குடும்பமாக இணைந்துகொண்ட எமது மக்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தன்னலன் கருதாத தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தொண்டர்கள் மற்றம் சமூகஆர்வலர்களின் அரிய சேவையினூடா முன்னெடுக்கப்பட்ட விழாவில் பெரியவர்கள், சிறுவர்கள், விருந்தினர்கள் உட்பட 5 000ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். விழா இரவு 10 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் விளையாட்டுவிழா ஏற்பாட்டுக்குழு,
தமிழர் புனர்வாழ்வுக்கழகம்
தொடர்புகட்கு: 01 40 38 30 74 |