.
 
 

இலங்கையின் வடக்குகிழக்குப் பகுதிகளில் இரண்டு இலட்சத்து இருபதாயிரம் பேர் மீள் குடியேறவேண்டியுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் 11.09.2011பாரீஸ்

போர் முடிந்து விட்டதாகவும் பொதுமக்கள் அனைவரும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறி வருகின்றது. ஆனால் இன்னமும் இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரத்து எண்ணூற்று அறுபத்து இரண்டு (2,020,862) மக்கள் தமது சொந்த காணிகளுக்கு செல்லவேண்டி உள்ளனர். இதில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதாவது எழுபதாயிரம் பொதுமக்களும் உள்ளடங்குவர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 18,576 குடும்பங்களைச் சேர்ந்த 90,000 பேர் வரை சங்கானை, கரவெட்டி, கோப்பாய், சாவகச்சேரி, வடமராட்சி கிழக்கு, காங்கேசந்துறை ஆகிய இடங்களில் மீள் குடியமர்த்தப் படவேண்டியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2006 ஆம் ஆண்டு 166,166 பேர் வசித்துள்ளனர். ஆனால் இதுவரை மீள் குடியேற்றம் செய்யப்பட்டோர் 118,214 பேர் ஆகவே இன்னமும் 47,925 பேர் மீள் குடியேற்றம் செய்யப்படவேண்டியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தின்படி 220,311 பேர் வசித்து வந்துள்ளனர். ஆனால் 2011 புள்ளிவிபரத்தின்படி இதுவரை அங்கு 73318 பேர் மட்டுமே திரும்பியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 2011 ஜூன் வரை அங்கு 86212 பேர் வசிப்பதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருகின்றது. அங்கு இன்னமும் 17,500 பேர் மீள் திரும்பவேண்டியுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இலக்கந்தை, உப்பூரல், தோப்பூர், முத்தூர், சம்பூர் ஆகிய இடங்களில் மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்ட நிலையில் அங்கு 12 500 பேர்வரை மீள் குடியேற்றம் செய்யப்படவேண்டியுள்ளனர்.

மொத்தத்தில் இன்னமும் 39,000 பேர் இடைத்தங்கல் முகாம்களில் உள்ளனர். 181862 பேர் வரை தமது சொந்த காணிகளில் மீள் குடியேற்றப்படாது உறவினர்களின் வீடுகளிலும் மாற்று முகாம்களிலும் தங்கி வாழ்கின்றனர். ஆனால் சிறிலங்கா அரசு 99 விழுக்காடு மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மீள் குடியேறிய இடங்களில் மக்களிற்கு வசதிகள் செய்யப்படவில்லை

மீள் குடியேறிய இடங்களில் மக்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தம் 108 படசாலைகளில் 78 பாடசாலைகளே திறக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 101 பாடசாலைகளில் 89 பாடசாலைகளே இயங்குகின்றன.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கால் நடை உற்பத்தி 10 விழுக்காடு கூட முன்னேற்றம் ஏற்படவில்லை. எடுத்துக்காட்டாக இரண்டு மாவட்டங்களிலும் 2008 ஆம் ஆண்டு பால் உற்பத்தி நாள் தோறும் 20,000 லீட்டர் ஆகும் ஆனால் 2011 ஜூன் மாத கணக்கெடுப்பின்படி இரு மாவட்டங்களிலும் 1850 லீட்டர்கள் மட்டுமே.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி, மன்னார் மாவட்டங்களில் 7800 படகுகள் சேதமடைந்தும் காணாமல் போயும் உள்ளன. ஆனால் இதுவரை 610 படகுகளே மீள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த இரு வருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுவரும் புனர்வாழ்வு அபிவிருத்தி திட்டங்களில் மீள் குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் 10 விழுக்காட்டை கூட எட்டவில்லை என்பதே மேற்கூறப்பட்ட புள்ளிவிபரங்கள் தெளிவாக கூறுகின்றன.

மேற்கூறப்பட்ட விபரங்கள் உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புக்கள், உள்ளூர் அரச அலுவலர்கள் மூலம் பெறப்பட்டவை ஆகும்.

எனவே அனைத்துலக சமூகம் மற்றும் அனைத்து அரசசார்பற்ற அமைப்புக்களும் இலங்கையில் சுதந்திரமான மதிப்பீடுகளை மேற்கொண்டு வடக்குக்கிழக்கு மக்களின் சுயமான வாழ்விற்கான உதவிகளை வழங்குவதோடு அவர்களின் இயல்பு வாழ்வை ஏற்படுத்துவதற்கான பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கும் தங்களின் கரிசனையைச் செலுத்தவேண்டும்.

நன்றி
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்

 
 

 

 

 

 

 

 

English